சென்னையில் நேற்று கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடியை, பாதுகாப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்தனர். எதற்காக பெட்ரோல் குண்டு வீசி, கவர்னர் மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்றார் என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கிண்டி, சர்தார் பட்டேல் சாலையில் உள்ள கவர்னர் மாளிகை முன், ரவுடி ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை பிடித்து, அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, சென்னை தெற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா அளித்த பேட்டி:
சர்தார் பட்டேல் சாலையில், நெடுஞ்சாலை துறை தலைமை அலுவலகம் உள்ளது. அந்த வழியாக கவர்னர் மாளிகை நோக்கி, மர்ம நபர் ஒருவர் நடந்து வந்துள்ளார். இவர், பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை எடுத்து வந்ததாக தெரிகிறது.
இவர், பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை, கவர்னர் மாளிகை நோக்கி வீச முற்பட்டபோது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து விட்டனர். இரண்டு பாட்டில்களும் கவர்னர் மாளிகைக்கு வெளிப்புறம், சர்தார் பட்டேல் சாலையில் தடுப்புவேலிகள் அருகே விழுந்து உடைந்தன.
பெட்ரோல் நிரப்பிய பாட்டில் ஒன்றின் திரியில் லேசான தீ மட்டும் இருந்தது. மர்ம நபரிடம் மேலும் இரண்டு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கவர்னர் மாளிகையை சுற்றி எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை; அங்கு பாதுகாப்பு குளறுபடியும் இல்லை.
பிடிபட்ட நபர், சென்னை நந்தனம், எஸ்.எம்., நகரைச் சேர்ந்த கருக்கா வினோத், 42, என்பது தெரியவந்துள்ளது. இவர், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், 'சி' பிரிவு ரவுடி பட்டியலில் உள்ளார்.
இவர் மீது, வெடி பொருட்கள் தடுப்பு சட்டம் மற்றும் கொலை முயற்சி என, 14 வழக்குகள்
உள்ளன. இரு தினங்களுக்கு முன் தான் சிறையில் இருந்து, ஜாமினில் வெளியே வந்துள்ளார். நேற்று காலை, 10:00 மணியளவில் மது குடித்துள்ளார்; பிடிபட்ட போதும் போதையில் இருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, கருக்கா வினோத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
யார் இந்த கருக்கா வினோத்?
* கடந்த 2015ல், மாநிலம் முழுதும் 'டாஸ்மாக்' கடைகளை மூட வேண்டும் என, போராட்டம் நடந்தது. அப்போது, சென்னை, தி.நகர் தெற்கு போக் சாலையில் செயல்பட்ட டாஸ்மாக் கடை மீது, பெட்ரோல் குண்டு வீசியதால், இவர் கைது செய்யப்பட்டார்
* விசாரணை என்ற பெயரில், போலீசார் அடிக்கடி அழைத்து கைது செய்வதாக, 2017ல், தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது, பெட்ரோல் குண்டு வீசினார்
* சிறையில் இருந்தபோது, பத்திரிகை வாயிலாக, 'நீட்' தேர்வால் தற்கொலை அதிகரித்து வருவதாக அறிந்ததாகவும், இத்தேர்வுக்கு ஆதரவாக பா.ஜ., செயல்படுவதாகவும் கூறி, 2022ல், தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசினார். இந்த வழக்கில் கைதாகி, தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்
* தற்போதும், 'நீட் தேர்வுக்கு ஆதரவாக கவர்னர் செயல்படுகிறார். எனக்கு சீக்கிரம் ஜாமின் கிடைக்காததற்கு கவர்னரே காரணம். அதனால் தான், கவர்னர் மாளிகையின் பிரதான நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசினேன்' என, போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.
கவர்னர் மாளிகையில் ஐ.பி., அதிகாரிகள்
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனே, மத்திய உளவு அமைப்பான, ஐ.பி., சிறப்பு இயக்குனர் ரவிச்சந்திரன், கவர்னர் மாளிகை அதிகாரிகளை சந்தித்தார். அப்போது, சென்னை தெற்கு போலீஸ் இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி மற்றும் அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். இருவரும் சம்பவம் குறித்து விளக்கினர்.
கவர்னர் மாளிகை பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து, உடைந்து கிடந்த பெட்ரோல் குண்டு மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
@Image@
கோட்டை விட்ட போலீஸ்
ரவுடிகள் ஜாமினில் வெளிவந்தால், அவர்களின் நடவடிக்கைகளை, உளவுத் துறை போலீசார் கட்டாயம் கண்காணிக்க வேண்டும். இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்களும் ரவுடிகளின் அசைவுகளை கண்காணிக்க வேண்டும்.பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் விவகாரத்தில், போலீசார் கோட்டை விட்டுள்ளனர். இச்சம்பவம், காவல் துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக, போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.@Image@
ஜனாதிபதி வருகை பாதுகாப்பு குறைபாடா?
இந்திய கடல்சார் பல்கலை விழாவில் பங்கேற்க, இன்று சென்னை வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சென்னை கவர்னர் மாளிகையில்தான் தங்குகிறார். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி இருப்பதையே காட்டுகிறது. இதுகுறித்து, கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறுகையில், ''கவர்னர் மாளிகையில், 30க்கும் மேற்பட்டபோலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். ஜனாதிபதிக்கான பாதுகாப்பில், எவ்வித குளறுபடியும் இல்லை,'' என்றார்.சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டமா?
கவர்னர் மாளிகை மீது, பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து,
அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதன் விபரம்:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: ஜனாதிபதி முர்மு, கவர்னர் மாளிகைக்கு வர உள்ள நிலையில், அடிப்படை பாதுகாப்பிற்கே குந்தகமான செயல்கள் நடந்திருப்பது, உளவுத் துறையும், போலீஸ் துறையும் மொத்தமாக செயல் இழந்து விட்டதையே காட்டுகிறது.
தமிழகம், பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் சேர்ந்து விட்டதோ என்ற அச்சமும், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. குண்டு வீசியவர், இரண்டு நாட்கள் முன் தான் சிறையில் இருந்து வெளிவந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அப்படியானால், கவர்னர் மாளிகை குண்டு வீச்சுக்கான திட்டம், சிறையில் திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகமும், இதற்கு பின் மிகப்பெரிய சதிவலை பின்னப் பட்டிருப்பதும் உறுதியாகிறது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு மோசமாக இருப்பதை பிரதிபலிக்கிறது. முக்கியம் இல்லாத விஷயங்களில், மக்களின் கவனத்தை திசை திருப்புவதில், தி.மு.க., மும்முரமாக இருக்கும்போது, குற்றவாளிகள் தெருக்களில் இறங்கி விட்டனர்.கடந்த, 2022 பிப்ரவரியில், சென்னையில் உள்ள தமிழக பா.ஜ., தலைமை அலுவலகத்தை தாக்கிய, அதே நபர் தான், இன்று ராஜ்பவன் மீதும் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். இந்த தொடர் தாக்குதல்களுக்கு, தி.மு.க., அரசு தான் நிதியுதவி
செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.
மத்திய இணை அமைச்சர் முருகன்: கவர்னருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தமிழக அரசு, முற்றிலுமாக தோல்வி அடைந்த அரசாக உள்ளது. போலி திராவிட மாடல் அரசால், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. இந்த குற்றவாளியோடு நிற்காமல், அவரின் பின்னணியில் யார் உள்ளனர்; அவரை இயக்கியது யார் என்று கண்டுபிடித்து, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.த.மா.கா., தலைவர் வாசன்: ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் மீது உரிய விசாரணை செய்ய வேண்டும். உண்மை நோக்கம் வெளிவர வேண்டும். கவர்னர் மாளிகைக்கு உரிய பாதுகாப்பை, அரசு உறுதி செய்ய வேண்டும்.
கோட்டை விட்ட போலீஸ்
ரவுடிகள் ஜாமினில் வெளிவந்தால், அவர்களின் நடவடிக்கை களை, உளவுத்துறை போலீசார் கட்டாயம் கண்காணிக்க வேண்டும். இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்களும் ரவுடிகளின் அசைவுகளை கண்காணிக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் விவகாரத்தில், போலீசார் கோட்டை விட்டுள்ளனர். இச்சம்பவம், காவல் துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக, போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கவர்னர் மாளிகை சார்பில் புகார்
தி.மு.க., தலைவர்கள் தொடர்ந்து அவதுாறு மற்றும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி வரும் நிலையில், ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது கவர்னரின் உயிருக்கு ஆபத்து இருப்பதைக் காட்டுவதாக, கவர்னர் மாளிகை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புகாரில் கூறியிருப்பதாவது:தொடர்ச்சியான அச்சுறுத்தல்களால் கவர்னர் அவரது பணிகளை செய்ய முடியாமல் உள்ளார். எனவே, புகார் குறித்து முறையான விசாரணை செய்து, தாக்குதலின் பின்னணியில் உள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னருக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -